இலங்கை இந்தியாவிடையே மற்றுமொரு நேரடி விமான சேவை...!


மும்பை - கொழும்புக்கிடையே நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்த இண்டிகோ தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று (12) முதல் இண்டிகோ மும்பை - கொழும்புக்கிடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாரத்தில் மூன்று முறை செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இண்டிகோ விமானங்களை இயக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இண்டிகோ இதுவரை கொழும்பில் இருந்து இந்தியாவின் மூன்று இடங்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் இந்தப் புதிய பாதை விரிவாக்கத்தின் மூலம், இனி நான்கு இடங்களுக்கு விமான சேவைகள் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதன் வாயிலாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணம், வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

தவிரவும் இந்தப் புதிய நேரடி விமான சேர்க்கையுடன், இண்டிகோ இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் இருந்து கொழும்புக்கு வாராந்தம் 30 விமானங்களை இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலைய விமான சேவைகள் நிறுவனமானது சமீபத்தில் இந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே விமான சேவைகளை ஆரம்பிக்க இண்டிகோவுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

அதற்கிணங்க, இண்டிகோ எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே தினசரி விமானச் செயற்பாடுகளுடன் நேரடி விமான சேவையைத் தொடங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.