உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது - மத்தியவங்கி

இலங்கையில் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் மக்களிடையே பல்வேறு வதந்திகள் பரவி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார் அதன் பலனாக பல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

அதிபர் தனது பயணத்திற்குப் பின்னர், இலங்கையில் அமெரிக்க டொலர், சீனாவின் யென் ஆகியவற்றைப் போல இந்திய ரூபாயையும் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு அனுமதிப்பது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிப்பதாக இந்திய அரசு தெரிவித்ததாகவும், அது சம்மந்தமாக முறையான அறிவித்தல்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய ரூபாய் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணமாக இருந்தாலும் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு அது செல்லுபடியாகாது.

இது தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று இலங்கையின் மத்திய வங்கி நேற்று முன்தினம் (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.