சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம்


இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் -228 கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்துள்ளது.

இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம் வழங்கப்படுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இன்று உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தை முதல் இரண்டு வருடங்களுக்கும் இலவசமாக இலங்கைக்கு வழங்க இந்தியா இணங்கியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு புதுடெல்லியில் இரு நாடுகளினதும் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இலங்கை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக டோர்னியர் 228 விமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

புதிதாக விமானம் ஒன்றை தயாரிப்பதற்கு இரண்டு வருடங்கள் செல்லும் என்பதால் டோர்னியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இரண்டு வருடங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விமானம் இன்று கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்துள்ளது.

இந்த விமானத்தின் இன்றைய உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறி லங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, இந்த விமானம் தொடர்பான ஐந்து தொழில்நுட்ப அதிகாரிகளைக்கொண்ட குழுவினர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 16ம் திகதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தரவிருக்கும் சீன உளவு கப்பலான யுவான் வாங் 05 க்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

அந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இந்தியா இலங்கையிடம் ராஜதந்திர ரீதியில் கோரியிருந்தது.

இருந்த போதும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி குறித்த சீனக் கப்பலின் வருகைக்கு இலங்கை அனுமதியளித்துள்ளது.

இந்த நிலையிலேயே தமது உளவு விமானமான டோர்னியர் 228 என்ற விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது.

டோர்னியர்-228 உளவு விமானம், இந்தியக் கடற்படையால் கடல் கண்காணிப்பு மற்றும் ஏனைய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையும் இந்த உளவு விமானத்தை கடல் கண்காணிப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2018ல் குறித்த விமானத்துக்கான கோரிக்கை இந்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் சீனாவின் கப்பல் விவகாரத்தில் இலங்கை எடுத்த முடிவு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை விட சீனாவுடன் இலங்கையின் உறவு வலுபெற்றுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக இந்தியா குறித்த கடல் சார் கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது என அரசியல் வல்லுநர்கள் எதிர்வுகூறுகின்றனர்.