அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இனப் பிரச்சினை தீர்வு குறித்து தமிழக் கட்சிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் மாதம் சுதந்திர தினத்திற்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ள பின்னணியில், அவரது பயணம் இந்த மாதமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இருதரப்பு பேச்சுக்களுக்காக இந்த மாதம் இந்திய வெளிவவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த உத்தியோகபூர்வ விஜயத்துக்கான இறுதி திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இறுதியாக கடந்த வருடம் மார்ச் மாதம், கோட்டாபய ராஜபக்ச அதிபராக பதவி வகித்த போது இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
அத்துடன், புது வருடத்தில் இலங்கை வரும் முதல் உயர்மட்ட வருகையாக இது கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் நெருக்கடியான காலகட்டத்தில், இந்தியா பல உதவிகளை செய்திருந்ததுடன் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி உதவியையும் வழங்கியிருந்ததாக இலங்கை அரசாங்க தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            