திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்: வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கை

இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தற்போது நடப்பு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கர்நாடக அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

எதிர்வரும் பெப்ரவரி 2-ம் தேதி சூரத் நகரில் ரயில்வே அணிக்கு எதிராக கர்நாடகா விளையாட உள்ளது. இந்த போட்டிக்காக கர்நாடக அணி வீரர்கள் அகர்தலாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட இருந்தனர்.

விமானத்தில் ஏறிய நிலையில் வாய் மற்றும் தொண்டை பகுதியில் எரிச்சல் ஏற்பட்டதன் காரணமாக மயங்க் அகர்வால், உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகர்தலா விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.வாய் பகுதியில் எரிச்சல் மற்றும் உதட்டில் வீக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இப்போது அவர் மருத்துவ ரீதியாக சீரான நிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளனர்.

தண்ணீர் என விமானத்தில் வைக்கப்பட்டு இருந்த கிருமி நாசினியை இவர் பருகியதாக தெரிகிறது. அதை முழுவதுமாக துப்பிய பிறகு வாய் பகுதியில் எரிச்சல் இருப்பதாக தெரிவித்த காரணத்தால் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது எந்தவித ஆபத்தும் இல்லை என்றும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக  வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.