இந்தியாவின் சந்திரயானை விட இலங்கையின் சுப்ரீம்சாட்டிற்கு அதிக செலவு! விளக்கம் கோரிய சஜித்

சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு இந்தியா 263 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே செலவிட்டுள்ள போதும் 2012ஆம் ஆண்டு சுப்ரீம்சாட் ஏவுவதற்கு இலங்கை 320 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2008, 2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் சந்திரயான் 1, சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 ஆகிய மூன்று முயற்சிகளுக்கும் 263 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுப்ரீம்சாட் திட்டத்திற்கான பாரிய செலவீனம் மற்றும் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கையில் செயற்கைக்கோள் ஏவப்பட்டதன் பின்னர், சந்திரனில் தரையிறங்குவதற்குப் பதிலாக இலங்கை ஒரு நாடாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார் .

இதேவேளை 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சராக தான் இருந்ததாகவும், இலங்கையில் இவ்வாறான செயற்கைக்கோள் ஏவப்படுவது குறித்து தனக்கு தெரியாது என்றும் சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.