இலங்கைத்தீவில் தமிழருடைய தேசத்தையும் அதன் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வை அடைந்து கொள்ள இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நேற்றையதினம் (20) இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்களை அக் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எழுத்து மூலம் சமர்ப்பித்தார். அதிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 13 ஆம் திருத்தம் தற்போதும் முழுமையாக நடைமுறையிலுள்ளபோதும்கூட தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு புரிந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை போன்றவற்றிற்கும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை.
குறிப்பாக, 13 ஆம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக, அன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் களச்சூழல் மேலும் மேலும் மோசமாகியே உள்ளது.
அரச கட்டமைப்பு ஒற்றையாட்சி அரசமைப்பாக இருக்கும் வரையில் எந்தவொரு வழிமுறையூடாகவும் அர்த்தமுள்ள சுயாட்சியை அனுபவிக்கவோ அல்லது சுயநிர்ணய உரிமையை உரியமுறையில் பிரயோகிக்கவோ முடியாதவாறு இருப்பதனால், அந்த ஒற்றையாட்சி முறைமைக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் அறிமுகப்படுப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே தமிழர் தரப்பு முழுமையாக அதனை நிராகரித்து வந்துள்ளது.
இந்த 13 ஆம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து, அதன் அதிகாரங்கள் குறித்து இலங்கையின் மீயுயர் நீதிமன்றுகளில் ஏறத்தாழ 30 வழக்குகள் விசாரிக்கப்பட்டு அதன் தீர்ப்புகள் அனைத்தும், அரச கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரைக்கும், அனைத்து அதிகாரங்களும், கொழும்பை மையப்படுத்திய மத்திய அரசிடமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாரப் பகிர்வுக்கு எதிராகவே நீதிமன்றங்கள் தீர்ப்புகளை அளித்திருக்கிறன.
இந்நிலையிலேயே, தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, 13 ஆம் திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தை இந்தியா கோரி வருகின்றது.
ஆனால், 13 ஆம் திருத்தத்தின் சரத்துகளின் அமுலாக்கம் குறித்து எப்போதெல்லாம் இலங்கையின் மீயுயர் நீதிமன்றை நாடிய போதெல்லாம், அது மேற்குறிப்பிட்டவாறே தீர்ப்புகளை அளித்திருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.