சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை நுழைவு! இந்தியா பதிலடி

பெலஸ்ரிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கட்டமைப்புக்களை கொண்ட சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை பயணம் தொடர்பான சீனாவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனக் கப்பலை நிறுத்துவதற்கு தமது நாடு தடையாக இருப்பதாக சீனா முன்வைத்துள்ள குற்றச்சாட்டை இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் அரிந்தம் பாக்ஸி நிராகரித்துள்ளார்.

சீனாவின் ஆய்வுக் கப்பலான யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படுவது தமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒரு விடயம் என இந்தியா கருதுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதன் பின்னணியில் குறித்த சீனக் கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்த நிலையில், பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள்காட்டி இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வாங் வென்பின் குறிப்பிட்டிருந்தார்.

சீனாவின் விஞ்ஞான ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான வழியில் பார்க்கவும், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது என்றும் வாங் கூறியிருந்தார்.

இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் அரிந்தம் பாக்ஸி இவ்வாறு பதில் அளித்தார்.

சமூக வலையத்தளங்களில் சீனக் கப்பல் இலங்கையில் நிறுத்தப்படுவது தொடர்பாக பலர் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும் இந்தியா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு. இலங்கையின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா பல்வேறு உதவிகளை செய்திருந்தது. இந்த வருடத்தில் மாத்திரம் இந்தியா இலங்கைக்கு 3.8 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

ஜனநாயக மற்றும் பொருளாதார மீள்ச்சிக்கு இந்தியா இலங்கைக்கு உதவும். இந்தியாவின் பாதுகாப்பு குறித்ததான தீர்மானத்தை நாம் சுயமாக எடுப்போம்.