இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்பட்ட மோதல்கள் தற்போது யுத்த நிலைமையாக மாற்றமடையக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அது இலங்கையிலும் தாக்கம் செலுத்தக் கூடும். எனவே இப்போதாவது இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர்
இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்பட்ட மோதல்கள் தற்போது ஒவ்வொரு இடங்களிலும் வெளிப்பட ஆரம்பித்துள்ளன.
பாக்கிஸ்தான் மாத்திரமின்றி பங்களாதேஷ_டனும் இந்தியா அதிருப்தியிலேயே உள்ளது. இவ்வாறு அயல் நாடு;களுக்கிடையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கும் அது பாதிப்பாக அமையும்.
எனவே அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை அரசாங்கம் பாராளுமன்றத்துக்காவது வெளிப்படுத்த வேண்டும்.
எவ்வாறிருப்பினும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையின் நிலப்பரப்பை மாத்திரமின்றி நீர்பரப்பையும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன் ஆழ் கருத்து என்ன என்பது அரசாங்கத்தைத் தவிர யாருக்கும் தெரியாது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் யுத்த நிலைமை ஏற்பட்டால் இலங்கையுடன் இந்தியா செய்து கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அரசாங்கம் தெரிவுபடுத்த வேண்டியது கட்டாயமாகும்.
எவ்வாறிருப்பினும் எமக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார்