இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் இந்தியா..!


இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது, ஆகவே தற்போது மேற்பார்வை பொறுப்பை ஏற்றால் நியாயமான ஒரு தீர்வை பெற முடியும் என எதிர்பார்க்கிறோம், என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேசமும் இந்த பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற  பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"வடக்கு மாகாணத்தில் இன்றும் போர் சூழல் நிலைமை தான் தற்போதும் காணப்படுகிறது. துப்பாக்கி சத்தங்கள் மாத்திரம் தான் இல்லை,ஆனால் போர் சூழலுக்கான சகல துன்பங்களையும் எமது மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

காணி அபகரிப்பு தொடர்ந்து இடம்பெறும் நிலையில் தான் உள்ளது. வனஜீவராசிகள் திணைக்களம் பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு மக்களின் காணிகளை அபகரிக்கிறது.

வடக்கு மாகாண மக்கள் விவசாயம் மற்றும் கடற்றொழில் கைத்தொழில் துறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மறுபுறம் இராணுவத்தினர் தமக்கான காணிகளை சுவீகரித்த நிலையில் உள்ளார்கள்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சர்வதேசத்தின் அழுத்தம் மற்றும் பொருளாதார பாதிப்பு ஆகிவற்றை முன்னிலைப்படுத்தியதாக அமைய கூடாது.

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு மனசாட்சியின் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாகும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையினை தொடர்ந்து தீர்வு காணும் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் மேற்பார்வையில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பு, ஐக்கிய நாடுகளின் பிரதிநிதித்துவம், நிபுணர் குழுவினர், புலம் பெயர் உறவுகள் ஆகிய தரப்பினரை ஒன்றிணைக்கும் ஒரு பொறிமுறை வகுக்கப்படும் போது தான் ஒரு நிரந்தர தீர்வை எட்ட முடியும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா ஆரம்ப காலத்தில் இருந்து தலையிட்டுள்ளது.இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக வலுவாக செயற்பட்டது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்தியா மேற்பார்வை பொறுப்பை எடுக்குமாக இருந்தால் ஒரு நியாயமான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை விவகாரத்தில் பார்வை கொண்டுள்ள நாடுகளையும் இவ்விவகாரத்தில் இணைத்துக் கொண்டால் இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தை சாதகமாக அமையும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால் சுபீட்சமான ஒரு நாட்டை உருவாக்க முடியும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தை நிரந்தரமான மற்றும் நியாயமான தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும்.

எதிர்வரும் 13 ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் நோக்கம் மனசாட்சியுடன் இடம்பெற வேண்டும்" என்றார்