இலங்கைக்கு ஆபத்தாக மாறிய இந்தியா..! சிறிலங்கா எம்.பி கொதிப்பு


இந்தியாவும் தமிழ்க் கட்சிகளும் திரைமறைவில் காதல் கொண்டால் அது சிறிலங்காவுக்கு ஆபத்தாக அமையும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரித்தார்.

மேலும் இது தொடர்பில் சிறிலங்கா அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

''இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் சந்திக்கவுள்ளனர் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தியாவில் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வடக்கு - கிழக்கு தமிழ்க் கட்சிகள் செயற்படுகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்க் கட்சிகள் சந்திப்பதற்குத் திரைமறைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதன் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தினர் செயற்படுகின்றனர்.

தீர்வு விடயம் தொடர்பில் பேச வேண்டுமெனில் இந்தியத் தரப்பினர் சிறிலங்கா அரசுடன் பேச வேண்டும். அதேவேளை தமிழ்க் கட்சிகளும் தீர்வு விடயம் தொடர்பில் பேச வேண்டுமெனில் சிறிலங்கா அரசுடன் பேசவேண்டும்.

அதைவிடுத்து இந்தியாவும் தமிழ்க் கட்சிகளும் திரைமறைவில் காதல் கொண்டால் அது சிறிலங்காவின் முன்னேற்றத்துக்கு ஆபத்தாக அமையும்.

இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவேண்டும்." என தெரிவித்தார்.