ஆபத்தில் கைகொடுத்தது இந்தியா, கைவிட்டது சீனா



கொழும்பு துறைமுக நகர் அமைக்கும் போது இலங்கை, சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமான உறவு காரணமாக இந்தியாவுடன் பகைத்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டாலும் இலங்கைக்கு, இந்தியா ஆபத்தில் கைகொடுத்தது. சீனா ஆபத்தில் கைவிட்டது. இதுதான் உண்மை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி எம்.பியுமான பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இந்தக் கொழும்பு துறைமுக நகர் அமைக்கும் போது சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமான உறவு காரணமாக, இந்தியாவுடன் பகைத்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இந்தியாவின் பகைமையை பெற்றுக்கொண்டு, இதனை நடைமுறைப்படுத்தினாலும் எமக்கு ஆபத்தில் உதவியது இந்தியாதான் என்பதை நாங்கள் மறக்க முடியாது.

நான்கு பில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா கொடுத்தது.  இந்தியா ஆபத்தில் கை கொடுத்தது. சீனா ஆபத்தில் கைவிட்டது. இதுதான் உண்மையான விடயம்.

வெளிநாட்டு மக்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் அரசாங்கத்தின் மீது இன்று நம்பிக்கை இல்லை. நம்பிக்கையில்லாமையின்மை காரணமாக வெளிநாட்டு உதவி கிடைப்பது தடுக்கப்படுகிறது. மக்கள் தினமும் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டம் செய்யும் போது பல்வேறு வகைகளில் போராட்டக்காரர்களை துன்புறுத்தும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

நாட்டின் அமைதியை பேண வேண்டுமானால் நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ள வேண்டும். அதிபர் மக்களின் வாக்குகள் இல்லாமல் வந்தாலும் தற்போது மக்களின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவே. அதனால் அவர் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.