விடுதலைப் புலிகளின் மீளுருவாக்க கைதுகளை சிறிலங்காவுக்கு அறிவிக்காத இந்தியா


தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களில் 7 பேருக்கு ஏற்கனவே இன்டர்போலின் சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

திருச்சிராப்பள்ளியில் ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மையென்றாலும், கைது செய்யப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா காவல்துறையினருக்கு இதுவரை இந்திய அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் குணா என்ற சி குணசேகரன் மற்றும் பூக்குட்டி கண்ணா என்ற புஸ்பராஜா ஆகியோர் அடங்குகின்றனர்.

அவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் ஆயுத விநியோகத்தரான ஹாஜி சலீமுடன் நெருங்கிய தொடர்பில் பணியாற்றினர் என்பது தெரியவந்துள்ளதுடன், இவர்கள், இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்க செயற்பட்டனர் என்று இந்திய புலனாய்வுப்பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவில் தவறுகளை செய்திருந்தால், இந்திய நீதிமன்றத்திலேயே அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதுடன், இலங்கைக்கு அவர்களை அழைத்து வரவேண்டுமானால், இராஜதந்திர ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எனவே, இது தொடர்பில் சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்ப்பதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.