ரூபாவின் வீழ்ச்சியின் பின்னணியில் இந்தியா! அம்பலத்திற்கு வந்த தகவல்

எமது நாட்டு ரூபாவின் பெறுமதியை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தீர்மானிக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பு - எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

“ இலங்கைக்கு இந்தியா ஒரு பில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கவேண்டுமானால், ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடையச்செய்யவேண்டும் என்று விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு அமைவாகவே டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 230 ரூபாவாகப் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்திருக்கின்றது.

வெளிநாட்டுச்சந்தை செயற்பாடுகள் மற்றும் கொடுக்கல், வாங்கல்கள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இவ்விடயத்தில் நெருக்கடிகளைக் குறைப்பதற்கு ஏதுவான வழிமுறைகளை கடந்தகாலத்திலிருந்து நாம் தொடர்ச்சியாக முன்வைத்துவருகின்றோம். இருப்பினும் அரசாங்கம் அதனை செவிமடுக்கவில்லை.

இப்போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

எவ்வித ஒருங்கிணைவும் முன்னேற்பாடுகளுமற்ற இந்த அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களின் விளைவாகவே நாடு இத்தகைய பாரதூரமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது” என்றார்.