அதிகரிக்கும் நெருக்கடி! ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு


இலங்கையில் யாரையும் பட்டினியில் வைக்க கூடாது என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதற்கு தீர்வாக சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதிய உணவு கிடைக்காத மக்களுக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஆலோசகர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாக தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பான கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து நடத்திய கலந்துரையாடலில் சுரேன் படகொட இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையை மேலும் தெளிவுபடுத்துவதற்காக வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு இங்கு அவர் பணித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுப் பிரச்சினைக்கு அரச அதிகாரிகளே பொறுப்பாளிகள் எனவும் படகொட மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, உணவு மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் அவதியுறும் இலங்கை மக்களுக்கு விரைவாக உதவிகளை வழங்குமாறு இலங்கை நண்பர்களிடம் கோரிக்கை விடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் தூதுவர் ஹெனா சிங்கர் நேற்று மீண்டும் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது