தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு..!


வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா இலுப்பையடி பகுதியில் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பரிமாறி தமிழ்மக்கள் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட அவலங்களை, அடுத்த தலைமுறையினருக்கு கடத்தும் நோக்குடன் குறித்த செயற்பாடு தமிழர்தாயகபகுதிகளில் பலதரப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்று.

அந்தவகையில் இன்றுகாலை 11மணியளவில் வவுனியா இலுப்பையடிக்கு முன்பாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.


மன்னார்

மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (12) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்துக்கு முன்பாக இடம் பெற்றது.

இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் யுத்த காலத்தில் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் முப்படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உறவினர்களால் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

பள்ளிமுனை பங்கு தந்தை,உதவி பங்குதந்தை பொதுமக்கள்,இளைஞர்கள் யுவதிகள் உட்பட அதிகளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கஞ்சியை அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.