முதல் டெஸ்ட்டில் டெவான் கான்வே அபார சதம்..

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று(ஜனவரி 1) மவுண்ட் மாங்கனியில் தொடங்கி நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த தொடரில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடாததால் டாம் லேதம் கேப்டன்சி செய்கிறார். முதலில் பேட்டிங் ஆடிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் லேதம் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான வில் யங் அரைசதம் அடித்தார். 52 ரன்னில் யங் ஆட்டமிழந்தார்.

3ம் வரிசையில் இறங்கிய டெவான் கான்வே மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார். அவரும் யங்கும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்தனர். யங் விக்கெட்டுக்கு பிறகு கான்வேவுடன் ஜோடி சேர்ந்த சீனியர் வீரர் ரோஸ் டெய்லர் 31 ரன்கள் அடித்தார். மறுமுனையில் நிலைத்து ஆடி சதமடித்த டெவான் கான்வே 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஹென்ரி நிகோல்ஸ் களத்தில் நிலைத்து நிற்க, டாம் பிளண்டெல் முதல் நாள் ஆட்டம் முடிவடையும் நேரத்தில் ஆட்டமிழந்தார். 88வது ஓவரில் அவர் ஆட்டமிழக்க, அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்துள்ளது. ஹென்ரி நிகோல்ஸ் 32 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

2ம் நாளான நாளைய ஆட்டத்தில் நிகோல்ஸுடன் ராச்சின் ரவீந்திரா ஜோடி சேர்வார். அதன்பின்னர் கைல் ஜாமிசன், டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், நீல் வாக்னர் ஆகிய வீரர்கள் உள்ளனர். எனவே நியூசிலாந்து அணி பெரிய ஸ்கோர் அடிப்பது உறுதி.