சீரற்ற காலநிலையின் விளைவு : இலங்கையில் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்


வெள்ள நீர் வடிந்து வருவதால், ஈக்களின் பெருக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் காணப்படும் சாதகமான சூழ்நிலை ஈ முட்டைகள் முதிர்ச்சியடைவதை துரிதப்படுத்துவதுடன், வெள்ள நீர் குறையும்போது ஈக்கள் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

புதிதாக குஞ்சு பொரித்த இந்த ஈக்கள், உணவு ஆதாரங்களைத் தேடி, அடிக்கடி மலம், குப்பைகள் மற்றும் அசுத்தமான பரப்புகளை நோக்கி ஈர்த்து, சுகாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துகின்றன என  வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஈக்களின் எழுச்சியின் விளைவுகள் பயங்கரமானவை என்பதுடன், வயிற்றுப்போக்கு நோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு காரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உள்ளிட்ட நோய்க்கிருமிகளை ஈக்கள் காவி கொண்டு வருகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.


அந்தவகையில் கடந்த 9 நாட்களில் மாத்திரம் 879 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக  கடந்த மே மாதம் மாத்திரம்  2, 647 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 25 ,799 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகளவான நோயாளர்களாக 9 ஆயிரத்து 441 பேர் மேல் மாகாணத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் குறித்த காலப்பகுதியில் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வெள்ளம் காரணமாக எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.