இரண்டாவது கடன் தவணை தாமதமாகலாம் : ஐஎம்எப் இடமிருந்து கிடைத்துள்ள பதில்

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களில் திருப்தி அடைய இரண்டு முக்கியமான விடயங்களை இலங்கை நிறைவேற்றவேண்டியுள்ளது.

எனவே சர்வதேச நாணய நிதியத்தின் 2வது தவணை நிதியை வழங்குவதற்கு நிலையான காலக்கெடு எதுவும் இல்லை என்று சர்வதேச நாணய நிதிய அதிகாரி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

இதற்கு மத்தியில் தமது குழு தனது விவாதங்களை முதல் மதிப்பாய்வின் பின்னணியில் விரைவில் பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை அடையும் இலக்குடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று நாணய நிதியக்குழு குறிப்பிட்டுள்ளது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதல் மீளாய்வுக்காக இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியக் குழு, தமது பயணத்தின் முடிவில் இதனை தெரிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது, மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 3.1 சதவிகிதம் சுருங்குகிறது அத்துடன் உயர் அதிர்வெண் பொருளாதார குறிகாட்டிகள் கலவையான சமிக்ஞைகளை தொடர்ந்து வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான குழுவின் அதிகாரிகளான பீட்டர் ப்ரூயர் மற்றும் கட்சியரினா ஸ்விரிட்சென்கா  ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பீட்டர் ப்ரூயர் மற்றும் கட்சியரினா ஸ்விரிட்சென்கா தலைமையிலான குழு செப்டம்பர் 14 முதல் 27, 2023 வரை கொழும்பிற்கு விஜயம் செய்தது.

இதன்போது குழுவினர் மதிப்பாய்வுகளை மேற்கொண்டதுடன், ஜனாதிபதி உட்பட்ட முக்கியஸ்தர்களையும் சந்தித்தனர்.

இந்தநிலையில் கடினமான ஆனால் மிகவும் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான தற்காலிக அறிகுறிகளைக் காட்டுவதால் இந்த முயற்சிகள் பலனைத் தருகின்றன.

பணவீக்கம் குறைந்துள்ளது. 2022 செப்டம்பரில் 70 சதவீதமாக இருந்த உச்சத்தில் இருந்து 2023 செப்டம்பரில் 2 சதவீதத்துக்கும் கீழே, மொத்த சர்வதேச கையிருப்பு இந்த ஆண்டு மார்ச்சுடன் காலத்தில் 1.5 பில்லியன் டொலர்கள் அதிகரித்தது.

மேலும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை தணிந்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் குழு தெரிவித்துள்ளது.

எனினும் நிரந்தரமான மீட்சி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி, சீர்திருத்த வேகத்தைத் தக்கவைப்பது மிகவும் முக்கியமானது என்று அந்த குழு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுதல், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாத்தல், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் ஊழல் பாதிப்புகளை நிவர்த்தி செய்தல், கட்டமைப்பு சீர்திருத்தங்களை முடுக்கிவிடுதல் உட்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதில் இலங்கை தொடர்ந்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.