சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றால் நாடு ஆபத்தான நிலைமைக்கு சென்றுவிடும் – பிமல்!

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று, நாட்டை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கிறீஸ் நாட்டுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ‘’சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று, மீண்டெழுந்த நாடுகள் உலகில் இல்லை.

1998 இல் இருந்து ஆர்ஜன்டீனா 9 தடவைகள் ஐ.எம்.எப்பிடம் கடன் பெற்றுள்ளது. இந்த 9 தடவைகளும் அந்நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று இலங்கை போன்ற சிறிய நாடுகளால் ஒருபோதும் மேலே வரமுடியாது.

கிறீஸ் எம்மை விட பல மடங்கு பெரிய நாடாகும். 13 வருடங்கள் ஐ.எம்.எப்பிற்கு சென்று, கடந்த வருடம் தான் அந்த நாட்டில் சிறியதொரு முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆனால், இந்தக் காலப்பகுதியில் நாட்டின் மின்சாரக் கட்டமைப்பு, நீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள், துறைமுகங்கள் என அனைத்தையும் கிறீஸ் விற்பனை செய்தது.

இதேபோன்று தான் இலங்கையிலும் ஏற்படும்.

இப்போதுள்ள ஆட்சியாளர்கள் இன்னும் இருந்தால் தனிநபர் கடன் தொகை இன்னமும் உயரும். கிறீஸ் நாட்டைப் போன்று, நாட்டின் ஏனைய சொத்துக்களையும் விற்பனை செய்யும் நிலைமை ஏற்படும்.

தனிநபர் வருமானத்தை விட தனிநபர் கடன்தொகை இன்று அதிகரித்துள்ளது. கோட்டா- ரணில்- ஹரின் போன்றோரை வைத்து நாட்டில் எதையும் செய்ய முடியாது. இவர்களால் மக்களை மீட்டெடுக்க முடியாது‘’ எனத் தெரிவித்தார்.