17 நிறுவனங்கள் அடையாளம் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


பிரமிட் திட்டம் உள்ளிட்ட மோசடிகள் தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு  இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பில் ,
பிரமிட் திட்டத்தினூடாக சட்டவிரோதமான முறையில் மக்களின் பண வைப்புகளைப் பெற்ற பதினேழு நிறுவனங்களை இனங்கண்டு பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் பல்வேறு பிரமிட் திட்டங்கள் செயற்பட்டு வந்த நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுகிறது.

 
எனவே இது தொடர்பில் தமக்கு தெரிந்த தகவல்களை எமக்கு தெரிவிக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.
இவ்வாறான மோசடிகள் அல்லது அது தொடர்பான தவறான செயல்கள் குறித்து மத்திய வங்கியின் "வங்கி அல்லாத நிதி நிறுவன மேற்பார்வை திணைக்களத்திற்கு" பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு மத்திய வங்கி ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

இதுபோன்ற சில நிறுவனங்கள் மத்திய வங்கியால் கண்காணிக்கப்படுவதாக பொய்யான பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 
அத்துடன் இதுபோன்ற விஷயங்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு மத்திய வங்கியின் மூத்த பேச்சாளர் ஒருவர் கேட்டுக் கொண்டார். மேலும் இதுபோன்ற தகவல்கள் கிடைத்தவுடன் விசாரணைகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.