ரசிகர்கள் இல்லாமல் ஆரம்பமான உலக கிண்ண கிரிக்கெட் முதலாவது போட்டி!

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய முதலாவது போட்டியில் நடப்பு வாகையர் பட்டத்தை தம்வசம் வைத்துள்ள இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எதிர்த்து விளையாடிவருகின்றது.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இந்தியாவின் 10 நகரங்களில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி அஹமதாபாத்தில் அடுத்த மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

உலக கிண்ண தொடருக்கான தங்க நுழைவுச்சீட்டு பொலிவூட் நட்சத்திரம் அமிர்தாப் பச்சனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷாவினால் வழங்கிவைக்கப்பட்டது.

இறுதிப் போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானத்திற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டு, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டமை சர்ச்சையாகியிருந்தது.

அத்துடன் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு அண்மித்ததாக நடைபெறும் இம்முறை உலக கிண்ண தொடரானது, நட்சத்திர வீரர்களை நினைவூட்டாது எனவும் அது பாரதீய ஜனதா கட்சியின் உலக கிண்ண போட்டிகளாகவே இருக்கும் எனவும் சில அரசியல் விமர்சகர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஆரம்பமான போட்டியில் உபாதை காரணமாக நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்ஸ்சன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ரிம் சௌதி ஆகியோர் விளையாடவில்லை.

அந்த வகையில் டொம் லதம் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணிக்கு தலைமை தாங்குகின்றார்.

மறுபுறம் அதிரடி வீரர் பென் ஸ்டொக்ஸ்சும் உபாதை காரணமாக இன்றைய போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 95 தடவைகள் சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடியுள்ளதுடன், இங்கிலாந்து 45 போட்டிகளிலும் நியூசிலாந்து 44 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இன்றைய போட்டிகளை பார்வையிட மைதானத்திற்கு ரசிகர்கள் அதிகளவில் வருகைதரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.