நலமாக உள்ளேன்.. எதற்கும் பயப்பட வேண்டாம், மீண்டும் அரசியலில் இறங்குவேன்! மகிந்த அதிரடி

எதற்கும் பயப்பட வேண்டாம், நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர், ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

இதன் போது கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியல் பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதேவேளை, மகிந்த ஆபத்தான நிலையில் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பின்னர் அந்த செய்திகள் பொய்யானது எனவும் சமூக ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்திற்கு வந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்த ராஜபக்சவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். மகிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மையில் வெளியான செய்திகள் குறித்தும் வினவியுள்ளனர்.

“நானும் வீட்டிலிருந்து அந்த செய்திகளைப் பார்த்தேன். அவை அப்பட்டமான பொய்கள். நான் நலமாக உள்ளேன். அரசியல் பணிகள் வழக்கம் போல் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாம்” என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.