தென் மாகாணத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான காலி(Galle), கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில்( Karapitiya National Hospital,) பணிபுரிந்த 12 விசேட வைத்தியர்கள், 60 பொது வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 100 வைத்தியசாலை ஊழியர்கள் 2023 மற்றும் 2024 க்கு இடையில் தமது வேலையை விட்டு விலகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
பணியை விட்டு வெளியேறிய விசேட வைத்தியர்கள் அனைவரும் மருத்துவ சேவைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதுடன் கராப்பிட்டி தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றிய சுமார் 60 பொது வைத்தியர்களும் தமது வைத்திய சேவையை விட்டு விலகி வெளிநாடுகளுக்கு சென்று வைத்திய தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 2023 ஆம் ஆண்டு முதல் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பெரும்பாலான தாதியர்களும், சுமார் 100 ஆஸ்பத்திரி ஊழியர்களும் தமது வேலைகளை விட்டு விலகியுள்ளதாகவும் அவர்களில் பல தாதி உத்தியோகத்தர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணையில், நிபுணத்துவ வைத்தியர்கள் உட்பட பெருமளவிலான பணியாளர்களின் பணி விலகலுக்கு உடனடி காரணிகள் முன்னைய அரசாங்கங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக அறிமுகப்படுத்திய உயர் வரிக் கொள்கைகளின் விளைவுகளே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
தென் மாகாணத்தின் பிரதான தேசிய வைத்தியசாலைகளில் ஒன்றான காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட கணிசமான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் வெளியேறியமையினால் வைத்தியசாலையின் செயற்பாடுகளில் கணிசமான தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை குறித்து காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.டி.எம். ரங்கா,தெரிவிக்கையில், “2023 முதல் இந்த வருடத்திற்கு இடையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணியாற்றிய 12 விசேட வைத்தியர்களும் 60 விசேட வைத்தியர்களும் பணியிலிருந்து விலகியுள்ளனர்.
இதேபோல், பெரும்பாலான தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுமார் 100 மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஆனால் தற்போதுள்ள சிரமங்களை குறைத்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்றார்.