அநுராதபுரம், கெடலாவ கால்வாயின் படுகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கலன்பிந்துனுவெவ பொலிஸார் பெருந்தொகையான தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
5,038 டீ56 தோட்டாக்கள் கால்வாய்ப் படுகையில் புதைக்கப்பட்ட நிலையில், நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர்வற்றியதால் அவை வெளியே தெரிந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
அப்பகுதியில் மேலும் வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிய மேலும் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலும் கால்வாயில் வெடிபொருட்களைக் கொட்டியதற்குக் காரணமானவர்களை புலனாய்வாளர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் இவ்வாறு பெருந்தொகையான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம் கொழும்பை அண்மித்த மீகொடை பிரதேசத்தில் நேற்றிரவு பத்து மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மீகொட, முதுஹேனவத்த, நந்துன் உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முன்பாக ஆகாயத்தை நோக்கி குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
முகம் மறையும் வகையில் ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கைத்துப்பாக்கி ஒன்றினால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிசார் துப்பாக்கித் தோட்டாவின் வெற்று உறையை கண்டெடுத்துள்ளனர்.
குறித்த வீட்டில் வசிக்கும் பெண் துபாயில் கார்கோ பொதி அனுப்பல் சேவையொன்றை நடத்தி வருவதாகவும் அவரைப் பயமுறுத்தும் வகையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.