நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலானது தேசிய மக்கள் சக்திக்கு ஒரு வரலாற்று வெற்றியை தேடித் தந்துள்ளது.
வருடக்கணக்காக தனக்காக தனி அரசியல் சாம்ரஜ்யம், பரம்பரை அரசியல் என மூத்த பல அரசியல்வாதிகளின் அரசியல் எதிர்காலம் வேறோடு அழிக்கப்பட்டு புதிய அரசியல் மாற்றத்தை நோக்கிய அரசியல் தெரிவாக தேசிய மக்கள் சக்தி காணப்படுகின்றது.
தமிழர் பிரதேசங்களில் கூட வரலாற்றில் முதன் முறையாக தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளை பின் தள்ளி தேசிய மக்கள் சக்தியை முன்னிருத்தியுள்ளனர்.
இதில் ஒரு படி மேலாக இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றில் கட்சி ஒன்று பெற்ற அதிகூடிய வாக்கு எண்ணிக்கையை தேசிய மக்கள் சக்தி பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை வரலாற்றில் அதிக வாக்குகளாக 2020 இல் சிறிலங்கா பொதுஜன பெரமுன பெற்ற 6,853,690 வாக்குகளின் சாதனையை முறியடித்து தேசிய மக்கள் சக்தி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதனடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியொன்று பெற்ற அதிக வாக்கு சதவீதமும் இதுவாகும் அத்தோடு அது 61.56% ஆக பதிவாகியிருந்தது.
தேசிய மக்கள் சக்தி
இதற்கு முன்னர் 2010 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 60.33% வாக்குகளைப் பெற்றிருந்தது மேலும், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றில் அதிக மாவட்டங்களில் வெற்றி பெற்ற கட்சியாகவும் தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த 21 தேர்தல் மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்றுள்ளதுடன் இதற்கு முன்னர் 2010 இல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 19 மாவட்டங்களில் வெற்றிப் பெற்று சாதனை படைத்திருந்தது.
அத்தோடு, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற சாதனையையும் தேசிய மக்கள் சக்தி படைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி 152 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முன்னதாக 2010 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 136 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது.
அதேபோல், 2020 இல் 128 ஆசனங்களை வென்று சிறிலங்கா பொதுஜன பெரமுன படைத்த சாதனையை முறியடித்து தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை பெற்று மாவட்ட மட்டத்தில் அதிகூடிய ஆசனங்களை பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
படைத்துள்ள சாதனை
இதனடிப்படையில், பொதுத் தேர்தலில் அதிக தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்ற கட்சி என்ற சாதனையைும் தேசிய மக்கள் சக்தி நிகழ்த்தியுள்ளது.
2020 இல் பொதுஜன பெரமுன பெற்ற 17 தேசிய பட்டியல் ஆசனங்களின் சாதனையை முறியடித்த தேசிய மக்கள் சக்தி 18 தேசிய பட்டியல் ஆசனங்களை சொந்தமாக்கியது.
அதன்படி, பொதுத் தேர்தலில் 159 ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அதிக இடங்களைப் பெற முடிந்தது.
இதற்கு முன்னர் 2020 இல் சிறிலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது.
விகிதாசார முறையின் கீழ் நாடாளுமன்றத்தில் உள்ள 225 ஆசனங்களில் 2/3 ஆசனங்களை தனியொரு கட்சி கைப்பற்றுவது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.