பழிதீர்க்கவா ரணில் ராஜபக்ச அரசாங்கம் இவ்வாறு செய்கிறது: ஹர்ஷன ராஜகருணா கேள்வி


மின் கட்டணத்தை 100% ஆலும் 200% ஆலும் அதிகரித்து பழைய கோபதாபங்களை பழிதீர்க்கவா ரணில் ராஜபக்ச அரசாங்கம் செயற்படுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மின் கட்டணம் அதிகரிப்பால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கவுள்ளது, ஆனால் இந்த அரசு இஸ்ரேல் - பலஸ்தீன யுத்தத்தை காரணம் காட்டியபடி இருக்கும்.

இதன் போது, தமது பிரச்சினைகளுக்கு எதிராக வெகுண்டெழும் மக்கள் வீதிக்கு இறங்கும் போது பல்வேறு சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களை ஒடுக்க முயற்சிகள் நடக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் நாட்டில் பல்வேறு தரப்புகளில் பிரச்சினைகள் ஏற்படும் போது, அமைச்சர்களை மாற்றி பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயற்பாடுகளும் இடம்பெறும், இதுவே சமகால நிகழ்வாக நிகழ்ந்து கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் சுகாதார அமைச்சினால் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் இடம்பெறுவது குறித்தும் தரம் குறைந்த மருந்துகள் குறித்தும் முழு நாடுமே பேசியது, ஆனால் இப்போது சுகாதார அமைச்சரை மாற்றியுள்ளனர், இந்த அமைச்சர் மாற்றத்தால் பிரச்சினைகள் சரிசெய்யப்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவேண்டிய அதிபர் தேர்தலிலும் சிக்கல்கள் இருப்பது நாட்டில் பிரச்சினையை வளர்க்குமேயன்றி குறைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.