நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.
தான் வசிக்கும் வீட்டின் மின்சாரக் கட்டணம் சுமார் 11 இலட்சம் ரூபாய் நிலுவைகளாக இருப்பதாக கூறி நேற்று அமைச்சர் காஞ்சன விஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமையானது, தமது சிறப்புரிமையை மீறும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் மாத்திரமே மின்சாரக்கட்டணத்தை செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் வசிக்கும் வீட்டின் மின்சாரக்கட்டணம், தாம் பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணம் அல்ல எனவும், அது ஏற்கனவே அங்கு வசித்த இரண்டு அமைச்சர்களின் கட்டணங்களும் சேர்ந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஹரின் பெர்னாண்டோ, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஏ.எல்.எம் அத்தாவுல்லா போன்ற பலர் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்களும் செலுத்தப்படாமல் உள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த கட்டணங்கள் அவர்களின் சொந்த பயன்பாட்டு கட்டணங்கள் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            