நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை கோரும் ஹமாஸ் - இஸ்ரேல் முட்டுக்கட்டை

கடந்த ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 36,731 ஆக அதிகரித்துள்ளது என்று காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகப் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாவர்.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 77 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 221 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போரினால் இஸ்ரேல் மீதான இராஜதந்திர தனிமைப்படுத்தல்கள் அதிகரித்திருப்பதோடு அதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது. பல ஐரோப்பிய நாடுகளும் பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரித்துள்ளன.

இதில் பலஸ்தீனத்தை அங்கீகாரித்த ஸ்பெயின், சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா தொடத்த காசாவில் பலஸ்தீனர்களுக்கு எதிரான ‘இனப்படுகொலை’ வழக்கில் பங்குதாரராக இணைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி உரையாற்றுவதற்கு விடுத்த அழைப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார்.

இஸ்ரேலிய சிறையில் உள்ள பலஸ்தீனர்களுக்கு பகரமாக காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது, காசாவுக்கான உதவிகள் செல்வது மற்றும் காசாவில் ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் திட்டத்தை பைடன் ஒரு வாரத்திற்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.

இந்தத் திட்டத்திற்கு ஜி7 மற்றும் அரபு நாடுகள் ஆதரவு அளித்திருந்தன. இதனை ஏற்கும்படி பைடனுடன் 16 உலக நாட்டுத் தலைவர்கள் ஹமாஸை வலியுறுத்தி இருந்தனர். ‘கால தாமதத்திற்கு நேரமில்லை. உடன்படிக்கையை ஏற்கும்படி நாம் ஹமாஸுக்கு அழைப்பு விடுக்கிறோம்’ என்று வெளியிடப்பட்ட கூட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான எதிர்பார்ப்பை வெளியிடும் வகையில் ஹமாஸ் அமைப்பிடம் இருந்து சாதகமான சமிக்ஞை கிடைத்ததாக எகிப்து உயிர்மட்டத் தரப்புகளை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அல் கஹேரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் பெய்ரூட்டில் இருக்கும் ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவரான ஒசாமா ஹம்தான் இந்த முன்மொழிவை ‘வெறுமனே வார்த்தைகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘அமெரிக்கர்கள் இதுவரையில், பைடன் தனது உரையில் கூறியதை உறுதிப்படுத்தும் ஆவணப்படுத்தப்பட்ட அல்லது எழுதப்பட்ட எதையும் முன்வைக்கவில்லை’ என்று அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


போர் நிறுத்தத் திட்டம் தொடர்பில் ஹமாஸ் இன்னும் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று கட்டார் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தது.

இதில் காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை முழுமையாக வெளியேறி நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் கோரிவரும் அதே நேரம் இஸ்ரேல் அதனை நிராகரித்து வருவதோடு போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் பிரதான முட்டுக்கட்டையாக உள்ளது.