ஹமாஸ் - இஸ்ரேல் போர்நிறுத்த பேச்சில் இழுபறி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் காசாவில் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் அங்கு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் உடன்படிக்கை ஒன்றுக்காக தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

“கெய்ரோவில் எமது பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஹமாஸின் எந்த புதிய முன்மொழிவையும் இஸ்ரேல் பெறவில்லை” என்று நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் தனது நிலைப்பாட்டை தளர்த்தும் வரை இஸ்ரேல் இந்தப் பேச்சுவார்த்தைகளில் மீண்டும் இணையப்போவதில்லை என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த செய்தி தொடர்பில் நேரடியாக பதில் அளிக்காத நெதன்யாகு, “ஹமாஸ் தனது மாயையான கோரிக்கைகளை கைவிட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். அதனை அவர்கள் கைவிட்டால் எம்மால் முன்னோக்கி நகர முடியும்” என்று கூறினார்.

அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸ் கடந்த செவ்வாயன்று கெய்ரோ சென்று இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றதோடு அவருடன் இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் தலைவர் டேவிட் பர்னியும் இணைந்தார். ஹமாஸ் தூதுக்குழு ஒன்று கடந்த புதனன்று கெய்ரோ சென்றடைந்தது.

மேற்குக் கரையில் ஆட்சியில் உள்ள பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், விரைவான போர் நிறுத்தம் ஒன்றுக்கு இணங்குமாறு ஹமாஸ் அமைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பதோடு பலஸ்தீனர்கள் மேலும் அவலத்தை சந்திப்பதை தடுக்கும்படியும் கேட்டுள்ளார்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நேற்று மூன்றாவது நாளை எட்டிய நிலையில் இஸ்ரேல் காசா மீதான தாக்குதல்களை தொடர்ந்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.