நாட்டில் கடந்த வருடம் அரை மில்லியன் பேர் வேலை இழந்துள்ளனர் - உலக வங்கி!

கடந்த 2022ஆம் ஆண்டில் நாட்டில் அரை மில்லியன் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் தொழிற் துறை- சேவைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் என்று உலக வங்கி கூறுகிறது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில், உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் உப தலைவர் மார்ட்டின் ரைசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் இலங்கையில் வறுமை தோராயமாக 13 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடனாளிகளிடமிருந்து கடன் நிவாரணம் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் புதிய நிதியுதவி ஆகியவை சீர்திருத்தங்களில் மக்கள் பொறுமையை இழக்காமல் இருப்பதையும் மாற்றத்திற்கான வாய்ப்பை இழக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவது என ரைசர் தெரிவித்துள்ளார்.

இதே காலக்கட்டத்தில் நகர்ப்புற வறுமையும் 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மும்மடங்காக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.ஏற்கனவே ஏழைகள் என வகைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைச் செலவு 65 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் ஏழைகள் அல்லாதவர்களுக்கு 57 சதவீதம் அதிகரித்துள்ளது.