கொழும்பில் நள்ளிரவில் 4 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு : அச்சத்தில் மக்கள்


கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 26 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. ரிவோல்வர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 
இதற்கிடையில், மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்பாக இன்று (06) அதிகாலை நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேநேரம் இன்று (06) அதிகாலை 1:38 மணியளவில், நீர்கொழும்பு குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

எனினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிதித் தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இதேவேளை இன்று (06) காலை பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் மீதும் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அடையாளம் தெரியாத இருவர் N99 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், துப்பாக்கிச் சூடு நடந்தபோது விற்பனை நிலையத்தில் ஒரு பெண் இருந்தபோதிலும், துப்பாக்கித் தாக்குதல் விற்பனை நிலையத்தின் குளிர்சாதனப் பெட்டியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அலுபோமுல்ல பொலிஸார் மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் மக்கள் இடையே பெரும் அச்சம் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.