'இலங்கையை ஆட்டிப்படைக்கும் துப்பாக்கிதாரிகள் : ஜே.வி.பி காரணமா?.."

 

நாடளாவிய ரீதியில் கொலைகள் மிக சரளமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தற்போதைய துப்பாக்கிதாரிகள் தமது செயற்பாடுகளை அச்சமின்றி முன்னெடுத்துச் செல்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ருவன்வெல்ல தொகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்  இதனைத் தெரிவித்த அவர்  

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொருளாதாரம் என அனைத்தும் பூச்சிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கொலைகள் மிக சரளமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. நீதிமன்றத்துக்குள் கூட கொலைகள் இடம்பெறுகின்றன. அந்தக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான செவ்வந்தி என்ற பெண் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுவே தற்போதைய அரசாங்கத்தின் நிலைமையாகும்.

கொள்ளையர்களை கைது செய்வதாகக் கூறி இந்த அராசங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் இன்று கொள்ளையர்கள் தான் அரசாங்கத்தை சிறைபிடித்துள்ளனர். ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தற்போதைய துப்பாக்கிதாரிகள் தமது செயற்பாடுகளை அச்சமின்றி முன்னெடுத்துச் செல்கின்றனர். 1971, 1988, 1989 மற்றும் 30 ஆண்டு கால யுத்தத்தால் 400 பில்லியன் டொலரை இழந்தோம். ஆனால் எமது கடன் 100 பில்லியன் டொலர் மாத்திரமே.

அவ்வாறெனில் கடனை விட அதிக இழப்பிற்கு ஜே.வி.பி.யும் பொறுப்பு கூற வேண்டும். இவ்வாறான நிலைமையில் தற்போது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக அதனை சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கின்றனர். 88, 89களில் நூற்றுக்கணக்கான தேயிலை தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன. அவை இருந்திருந்தால் இன்று எம்மால் பாரிய தொகை அந்நிய செலாவணியை பெற்றிருக்க முடியும்.

பொருளாதார நெருக்கடிளிலிருந்து மீள்வதற்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அனைவரையும் வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் தாம் கடிதமொன்றை அனுப்பியதாகவும் அந்த கடிதத்துக்கு ட்ரம்ப் இணக்கம் தெரிவித்து விட்டதாகவும் பிரதி அமைச்சரொருவர் குறிப்பிடுகின்றார். ட்ரம்ப் ஜே.வி.பி.யினரைக் கண்டு அந்தளவுக்கு அஞ்சுகின்றாரா?  மே 6ஆம் திகதியுடன் அரசாங்கத்தின் பொய்கள் நிறைவுக்கு வரவுள்ளன என்றார்.