முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆட்சியில் வடமத்திய மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட மஹீபால ஹேரத்தினால் அநுராதபுரம் - பெரமியங்குளம் வனப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட ஹோட்டல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
மஹிபால ஹேரத் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி தனது மனைவியின் பெயரில் பெரமியன்குளம் வனப்பகுதியில் அமைத்துள்ள ஹோட்டல் மற்றும் 60 பேர்ச்சர்ஸ் காணியில் அமைத்துள்ள கட்டிடம் என்பவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, குறித்த கட்டிடத்தை இடிக்குமாறு பிரதேச செயலாளர் கடந்த மாதம் 18 ஆம் திகதி ஒரு கடிதத்தில் அவருக்குத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த கட்டிடம் மற்றும் ஹோட்டல் ஆகியவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் கொள்கைக்கமைய அனுராதபுரம் மாவட்டத்தில் காணப்படும் வனப்பகுதியின் எல்லை நிர்ணயத்தை நீர்ப்பாசனத் திணைக்களம் அண்மையில் ஆரம்பித்திருந்தது.
இதற்கமைய பெரமியன்குளம் வனப்பகுதியை எல்லை நிர்ணயம் செய்யும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு சட்ட ஆவணங்களும் இன்றி அங்கு சட்டவிரோதமாக ஹோட்டல் அமைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் களுத்துறை பிரதேச சபைக்கான வேட்பாளர் ஒருவர், ஜீப் வண்டி ஒன்றை மோசடியாகப் பதிவு செய்தமை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளையைச் சேர்ந்த 38 வயதுடைய ருசிரு ஸ்ரீமால் பெர்னாண்டோ என்ற வேட்பாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வ தரவுகளைத் திரிபுபடுத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் இவர் பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவல்களின்படி, சந்தேகநபர் வாகனப் பதிவுப் பதிவேடுகளை மாற்றியமைத்து, குறித்த ஜீப் வண்டியைத் தவறாகப் பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.