தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30.09.2024) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே, மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் பெற்றோர்கள், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கசிந்த மூன்று வினாக்களுக்கும் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
குறித்த தீர்மானமானது, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட 07 பேர் கொண்ட குழு முன்வைத்த பரிந்துரையில் கீழ் எடுக்கப்பட்டது.
எனினும், பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்த விடயம் தொடர்பில் அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இதன் போது, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், தற்பொழுது பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்தில் எதுவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார்.