குருநாகலில் மகிந்தவிற்கு அமோக வரவேற்பு

இலங்கை வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற பிரச்சாரத்தை நான் இந்த அலுவலகத்தில் இருந்துதான் ஆரம்பித்தேன் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) கண்ணீருடன் நினைவு கூர்ந்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் (Johnston Fernando) குருநாகல் வில்கொடவில் கட்சி அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரித்து நாசமாக்கப்பட்ட  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வில்கொடவில் கட்சி அலுவலகம் நேற்று (28) மீள திறக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட அலுவலகம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறும் என முதலில் கூறப்பட்ட நிலையில் மகிந்தவின் எதிர்பாராத வருகை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.

மகிந்த ராஜபக்சவின் திடீர் வருகையால் பெருந்திரளான மக்கள் அவரை வரவேற்க முற்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த அலுவலகம் முன்பை விட இன்று அழகாக இருக்கிறது என மகிந்த ராஜபக்ச மக்களிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.