பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் நீதிமன்றத்துக்குச் சென்றால், தொழிலாளர்கள் சார்பில் வழக்கில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா அடிப்படை சம்பளமும், 350 ரூபா மேலதிகக் கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டுமென நிர்ணயிக்க உத்தேசித்துள்ளதாக தொழில் ஆணையாளரால் ஏப்ரல் 30ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்ரஸின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இது குறித்து உத்தியோகபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பை தம்மால் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம், இதற்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய தரப்பினருக்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அதற்கமைய முதலாளிமார் சம்மேளனம் சம்பள விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ள வழக்கு தொடர்பில் தொழிலாளர்கள் தரப்பு நியாயத்தை முன்வைப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் சட்ட உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கம்பனிகளுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காது சம்பள அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனால் தம்மால் அதற்கு இணக்கம் தெரிவிக்க முடியாதென்றும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்தை அவர்கள் போக்கில் விட முடியாது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தொழிலாளர்கள் சார்பில் சட்ட உதவி, ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.