தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் ஐந்தாண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படுவதற்காகவே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து வாரங்களுக்குள் அல்ல என்றும் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐந்தாண்டுகளில் பூர்த்தி செய்யுமெனவும் சஜித் பிரேமதாச(sajith premadasa) போன்ற சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறுவது போன்று ஐந்து வாரங்களுக்குள் நிறைவேற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
"நாங்கள் இன்னும் பல முடிவுகளை எடுக்க வேண்டும். ஐந்தாண்டுகளாகத் திட்டமிடப்பட்ட ஒரு பணியை ஐந்து வாரங்களுக்குள் முடிக்க முடியாது. தேசிய மக்கள் சக்தியின் அறிக்கை ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்.
நாங்கள் இன்னும் அரசாங்கத்தை அமைக்கவில்லை
நாங்கள் இன்னும் அரசாங்கத்தை அமைக்கவில்லை. கடந்த ஐந்து வாரங்களுக்குள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன.
நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறியதாகவும், இறுதியில் நாட்டை திவாலான நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும், தற்போது மூன்று அமைச்சர்கள் மட்டுமே நாட்டை இயக்குவதாகவும் அமைச்சர் கூறினார்.
"நாங்கள் இப்போது ஒரு புதிய பாதையில் பயணிக்கிறோம் என்பதைக் காட்டியுள்ளோம். பொருளாதாரம் திவாலாவதற்கு முக்கிய காரணம் ஊழல் அரசியல் கலாச்சாரம், மோசடி, ஊழல் மற்றும் வீண் விரயம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.