பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் பேரூந்துகளில் காணப்படும் வடிவமைப்புக்களை மாற்றுதல் மற்றும் மாற்று உருவமைப்புக்கள் தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய இது குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கமைய மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தின் முற்கூட்டிய அனுமதியுடன் வாகனங்களின் வடிவமைப்புக்களை மாற்றுதல் மற்றும் மாற்று உருவமைப்புக்களை மேற்கொள்ளலாம்.
அதற்கிணங்க, 1983ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மோட்டார் வாகனங்கள் கட்டளைகள் அவ்வப்போது திருத்தப்பட்டு, வாகனங்கள் மாற்று உருவமைப்புக்கள் செய்யக்கூடிய விதங்கள் பற்றிய ஒழுங்குவிதிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனாலும், கடந்த காலங்களில் அவ்வாறான கட்டளைகள் மூலம் வெளியிடப்பட்டுள்ள வாகன உதிரிப்பாகங்களைப் பொருத்துதல் மற்றும் வடிவமைப்பு மாற்றங்களுக்கு மேலதிகமாக, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் மூலம் உள்ளக பொறிமுறை மூலம் பேரூந்துகளை அலங்காரப்படுத்தல் மற்றும் மாற்று உருவமைப்புக்களுக்கான வழிகாட்டிக் கோவையொன்று தயாரிக்கப்பட்டு உள்ளக சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் அதற்குரிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் குறித்த கட்டளைகள் வெளியிடப்படவில்லை. அதனால் இவ்வனைத்து நிலைமைகளையும் கருத்தில் கொண்டு பேரூந்துகளின் அலங்காரங்கள் மற்றும் மாற்று உருவமைப்புக்களால் பேரூந்துகளில் பயணிக்கின்ற பயணிகளின் பாதுகாப்புக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக முறைசார்ந்த வகையில் செயலாற்றுவதற்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு உள்ளிட்ட ஏனைய அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.