மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

 
மின்சார கட்டணத்தை மூன்று வருடங்களில் நூற்றுக்கு 30 சதவீதம் வரை குறைத்து ஸ்திர நிலையில் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் திட்டம். அதற்கான நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகிறதென வலுசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் நளின்பண்டார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

நளின் பண்டார தனது கேள்வியில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் பிரசாரங்களின்போது மின்சார கட்டணத்தில் மூன்றில் ஒன்று விலை குறைப்பு மேற்கொள்வதாக தெரிவித்திருந்தது. 3ஆயிரம் கட்டணத்தை  2ஆயிரமாக்குதாகவும் 9ஆயிரம் கட்டணத்தை 6ஆயிரமாக குறைப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் தற்போது அந்த சூத்திரத்துக்கு விலை குறைவடையவில்லை.
மசகு எண்ணெய் பெரல் ஒன்று ஜனவரி மாதம் 78 டொலரில் இருந்து 64 டொலர்  வரை குறைந்துள்ளது. அதேபோன்று நிலக்கரி மெட்ரிக் தொன் கடந்த நவம்பர் மாதம் 150 ஆக இருந்து இன்றாகும்போது அது 101 ஆக குறைவடைந்துள்ளது. அதனால் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் இணைந்து அடுத்த காலாண்டு மின் கட்டண திருத்தத்தின்போது மூன்றில் ஒரு வீத மின்கட்டணம் குறைக்க முடியும். எனவே அரசாங்கம் அடுத்த மின்கட்டண திருத்தின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் மின்கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன் என்றார்.


இதற்கு பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க

மூன்று வருடங்களுக்குள்ளே நூற்றுக்கு 30 வீத மின்கட்டணத்தை குறைப்பதாக தேர்தல் பிரசாரங்களின் போது தெரிவித்திருந்தோம். இதனை காலாண்டுக்கு ஒருமுறை கூடி குறைவதை இதன்மூலம் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. மாறாக 3வருடமாகும்போது மின்கட்டணத்தை நூற்றுக்கு 30வீத அளவு மின்கட்டணத்தை ஸ்திரமாக கொண்டுசெல்வதே எமது எதிர்பார்ப்பு. அதுவே பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் தேவையாக இருக்கிறது.
அத்துடன் நிலக்கரி ஒரு வருடத்துக்கு தேவையான தொகையையே நாங்கள் கேள்வி கோரல் முன்வைக்கிறோம். அதனால் இடைகாலவத்தில் ஏற்படுக்கின்ற விலை குறைப்புகளை எங்களுக்கு எடுத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு செய்யப்போனால் இறக்குமதி செய்யும்போது சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது. அதனால் இந்த கட்டணத்தை ஸ்திர நிலைக்கு கொண்டு சென்று 3வருடத்துக்குள் நூற்றுக்கு 30வீதத்துக்கு குறைவாக கொண்டு செல்வதே எமது எதிர்பார்ப்பாகும்  என்றார்