கோட்டாபய ராஜபக்ச தயாரில்லை : அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள்

21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயாரில்லை என்பது தெரியவந்துள்ளதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் அமைச்சுக்களை கையகப்படுத்துதல் மற்றும் அமைச்சுக்களை மற்றவர்களுக்கு பகிர்வது தொடர்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்கள் அப்படியே இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

19வது திருத்தச் சட்டமும் 21 வது திருத்தச் சட்டமும்

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதி தன்னிச்சையாக அமைச்சுக்களை கையகப்படுத்தும் அதிகாரம் நீக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிப்பது வரையறுக்கப்பட்டிருந்தது.

19வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பின்னர் பதவிக்கு வரும் ஜனாதிபதிக்கு அமைச்சு பதவிகளை வகிக்க முடியாது என கூறப்பட்டிருந்தது.

மேலும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் உறுப்பினர்கள் அடங்களாக 10 பேரை கொண்டிருக்க வேண்டும்.

20 வது அரசியலமைப்புத் திருது்தச் சட்டத்திற்கு அமைய அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கப்பட்டிருந்த பெயரளவிலான அதிகாரம் அப்படியே 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தாலும் ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்த முடியும் எனவும் அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும் 19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் 20வது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

21 வது திருத்தச் சட்டத்திலும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வகையிலேயே ஷரத்துக்கள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.