கோட்டபாய வேறு நாட்டில் தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார்- தாய்லாந்து பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.ஆரம்பத்தில் தங்கள் நாட்டில் தஞ்சமடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுக்கவில்லை என தாய்லாந்து அரசாங்கம் அறிவித்த நிலையிலேயே தற்போது அந்நாட்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாய்லாந்து அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாகவும் அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்ததுடன் கடந்த ஜூலை 9ம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.இதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2 நாட்களில் மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14ம் திகதி சிங்கப்பூர் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.