நாடு திரும்பிய கோட்டாபய..! அவரின் மீள் அரசியல் பிரவேசம் தொடர்பில் மகிந்த வெளியிட்ட தகவல்



கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் மற்றும் பிரதமராக நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.

குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, முன்னாள் அதிபர்  கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் அவரே சிறந்த முடிவினை எடுப்பார் எனத் தெரிவித்தார்.

இவ்வாறிருக்க, நாட்டில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச நேற்று நள்ளிரவு மீண்டும் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

இலங்கையில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு வழியாக சிங்கப்பூரை சென்றடைந்தார். இதேவேளை, அவர் கடந்த 11 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றிருந்தார்.

முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்ச இராஜதந்திர கடவுச்சீட்டைக் கொண்டுள்ளதால், 90 நாட்கள் வரை தாய்லாந்தில் அவருக்கு தங்கியிருக்க முடியுமென தாய்லாந்து பிரதமர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும், கோட்டாபய ராஜபக்ச நேற்று நள்ளிரவு நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.