முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு திரும்ப முடியாதவாறு வழக்குகளை தாக்கல் செய்தவர் தானே என புலம்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றால் தான் தாக்கல் செய்த வழக்கின் மூலம் அவர் கைது செய்யப்படுவார் என ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார்.
இணைய வழி நடத்தப்பட்ட கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள தனது மனைவியின் ஊடாக மீண்டும் அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்கு கோட்டாபய தனது சட்டத்தரணிகள் ஊடாக முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து தப்பியோடிய கோட்டாபய முதலில் மலேசியாவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் அதனைத் தொடர்ந்து தற்போது தாய்லாந்திற்கும் சென்றுள்ளார்.
தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கவே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளியே நடமாடக்கூடாது, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் அதாவது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமை போன்ற நிலையிலேயே அவர் உள்ளார்.
இந்த நிலையில் அவர் எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக பொதுஜன பெரமுனவினர் தெரிவித்துள்ளதுடன் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமும் நேரில் சென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.