கோட்டபாய அமெரிக்க கிரீன் அட்டை விசாவை பெற நடவடிக்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காய் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்த கோட்டாபய தற்பொழுது மீண்டும் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய மக்கள் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மாலைதீவு, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றார், அங்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் தற்பொழுது 90 நாட்கள் தங்கியிருக்கும் அனுமதியில் தாய்லாந்து சென்றுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் தாய்லாந்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில் மீண்டும் அமெரிக்காவில் வசிப்பதற்கு முயற்சித்து வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, கோட்டபாய அமெரிக்க கிரீன் அட்டை விசாவை பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கோட்டாபயவின் மனைவி அயோமா ராஜபக்ச இன்னும் அமெரிக்க குடியுரிமையுடன் இருப்பதால் அவர் அமெரிக்கா செல்வதில் தடை இல்லையெனவும், மனைவி அமெரிக்க குடியுரிமையுடன் இருப்பதால் கோட்டாபய கிரீன் அட்டை விசாவை விண்ணப்பிக்க தகுதியுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, அமெரிக்காவில் உள்ள அவரது சட்டத்தரணிகள் இதற்கான விண்ணப்ப நடைமுறையை கடந்த மாதம் முதல் ஆரம்பித்துள்ளதாக உயர்மட்ட ஆதாரங்களை சுட்டிக்காகாட்டி ஆங்கில ஊடகம் செய்தி வெளியியட்டுள்ளது.

இக்கட்டான நிலையில் சிக்கியுள்ள கோட்டாபயவுக்கு மனைவியின் அமெரிக்க குடியுரிமை மூலமே அமெரிக்க கீரின் விசாக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும், எவ்வாறாயினும் நாடு அற்ற நிலையில் பல்வேறு நாடுகளில் தஞ்சமடையும் கோட்டாபயவுக்கு அமெரிக்க கீரின் விசா வரப்பிரசாதமாக அமையுமா எனவும் அவதானிக்கப்பட்டு வருகின்றது. 

இதன் காரணமாக கோட்டாபய பாரிய பரிதாப நிலைக்குள்ளாகியுள்ளதாக மக்கள் மத்தியில் பரவலான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்று வருகின்றது.

எவ்வாறாயினும், கோட்டாபய நாடு திரும்ப வேண்டும் என மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், பூரண பாதுகாப்புடன் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட வேண்டும் எனவும் ரணில் தலைமையிலான அரசுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது.

இதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அவர் இலங்கை திரும்புவார் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.