ஆண்ட்ராய்டு அப்டேட்: செயலிகளுக்கு ஏற்றவாறு மொழியை மாற்றும் வசதி!

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஏற்றவகையில், பல மாறுதல்களை மேற்கொண்டு வருகிறது கூகுள் நிறுவனம். செயலிகளை பயன்படுத்தும் போது, ஏற்படும் மொழி பிரச்னைகளை களைய புதிய நடைமுறையை கூகுள் நிறுவனம் சோதித்து வருகிறது. அதன்படி, செயலிகளுக்கு ஏற்றவாறு மொழியை தேர்வு செய்து நாம் பயன்படுத்த முடியும்.

Android Police அறிக்கையின்படி, “பேன்-லிங்குவல் என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட பன்மொழி பயனர்களுக்கு பயனுள்ள புதிய அம்சத்தை கூகுள் சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் பயனர்கள் ஒரு செயலியின் அடிப்படையில் மொழி அமைப்புகளை மாற்றியமைப்பதை சாத்தியமாக்கும்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அமைப்புகளில் இருக்கும் "மொழி & உள்ளீடு" (Language & Input) பக்கத்தில் புதிதாக ‘செயலி மொழி’ (App Language) என்ற விருப்பத் தேர்வை கூகுள் சேர்க்கும். ’செயலி தகவல்’ (App info) மூலமாகவும் பயனர்கள் தங்களுக்கு தேவையான மொழியை மாற்றியமைக்க முடியும்.

இந்த அம்சம் நிறுவப்பட்டதும், மொழியை மாற்ற பயனர்கள் ஒவ்வொரு செயலியின் அமைப்புகளுக்கு (Settings) செல்ல வேண்டியதில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆண்ட்ராய்டு 12 பதிப்புடன் அறிமுகப்படுத்திய புதிய மொழிபெயர்ப்பு அம்சத்தினை, புதிதாக வரும் அம்சத்துடன் கூகுள் இணைக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.

இரண்டு அம்சங்களும் இணைந்தால், ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் உள்ளூர் மொழியில் எந்த செயலியையும் பயன்படுத்த முடியும். அது ஆங்கிலத்தில் மட்டுமே செயல்பட்டாலும் கூட, பயனர்கள் உள்ளூர் மொழிகளில் செயலிகளை பயன்படுத்த முடியும்.

இந்த அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு வெளியாகும் ஆண்ட்ராய்டு 13 பதிப்புடன் உடன் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. நிலையான ஆண்ட்ராய்டு 13 பதிப்பு செப்டம்பர் 2022க்கு முன் வெளியிடப்பட வாய்ப்பில்லை என்றாலும், டெவலப்பர் முன்னோட்ட பதிப்பு முதல் காலாண்டு முடிவதற்குள் வெளியிடப்படலாம் என்று கருதப்படுகிறது.