வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்


தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதை காரணம் காட்டி வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்வது தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை உடனடியாக மீள எடுக்குமாறு சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்தை அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக 'பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழை பெற வேண்டும் என்ற நடைமுறை காரணமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய எதிர்ப்பார்க்கும் எந்தவொரு இலங்கையரும், அந்தத் திருமணத்தை பதிவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் 'பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்' பெறுவது கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இலங்கையர்களை திருமணம் செய்ய விரும்பும், வெளிநாட்டவர்கள், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘பாதுகாப்பு அனுமதி அறிக்கையை’ பெற, பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என ஆறு மாதங்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இலங்கைக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் தமது வாழ்க்கைத் துணையின் நுழைவு விசாவை பயன்படுத்தி நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாலேயே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி நாட்டிற்குள் அடிப்படைவாதம் வேரூன்றுவதைத் தடுப்பதற்கு சிறிலங்கா மக்கள் திருமணம் செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து தடைநீக்கல் சான்றைப் பெற்றுக்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்வதற்கான தடைகளை நீக்குமாறு, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது பிரதமர் ஆலோசனையை வழங்கியுள்ளார்.