பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனாவின் செயற்பாடுகள் மற்றும் வார்த்தைகள் தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு பெண்களை மிக கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். இது பாராளுமன்ற கௌரவத்தை அவமதிப்பதாகும்.
இராமநாதன் அரச்சுனா இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பயன்படுத்தியுள்ள சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அனைத்தையும் ஹன்சாட் பதிவில் இருந்து நீக்க உத்தரவு பிறப்பிக்கின்றேன்..
இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வெளியிடும் கருத்துக்களை ஓடியோ, வீடியோ வடிவில் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி, நாளை முதல் மே 8 ஆம் திகதி வரை நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனா தெரிவிக்கும் கருத்துக்கள் ஒளிபரப்பப்படமாட்டாது.
மேலும் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரையை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடவும் கூடாது.
குறித்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் நடத்தையின் அடிப்படையில் இந்தத் தற்காலிக தடை, நீக்கம் நீக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.