கையடக்க தொலைபேசியூடாக மின்சாரம் தாக்கிய சிறுமி பலி



கையடக்கத் தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த முன்பள்ளிச் சிறுமி ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.

மக்கொன, முங்ஹேன, லக்தினு வீடமைப்புத் திட்டத்திலுள்ள மூன்றரை வயதுடைய விஹிகி நெதாஷா என்ற முன்பள்ளிச் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


குறித்த சிறுமி கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்யப்பட்டிருந்த அறையின் தரையில் படுத்திருந்தவாறு பார்த்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கையடக்க தொலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த சிறுமி எதுவும் பேசாமல் தரையில் இருப்பதைக் கண்ட, சிறுமியின் மூத்த சகோதரர் தாயிடம் அதனை தெரிவித்துள்ளார்.

மயங்கிய நிலையில் தரையில் கிடந்த சிறுமியை உடனடியாக பேருவளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிறுமியை சுயநினைவுக்கு கொண்டுவர வைத்தியசாலை ஊழியர்கள் கடும் முயற்சி மேற்கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை. 

கையடக்கத் தொலைபேசி சார்ஜ் செய்யப்பட்ட இடத்தில், சிறுமி அதனை மார்பு பகுதியில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கையடக்கத் தொலைபேசியில் ஏற்பட்ட அதிக மின்னோட்டத்தையடுத்து இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 அதிக மின்னோட்டம் காரணமாக சிறுமியின் மார்புப் பகுதியில் இரண்டு சிறு காயங்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.