சுமந்திரனை இலக்கு வைத்திருந்த கணேமுல்ல சஞ்சீவ, அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் : துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அரசியலில் சலசலப்பு




பிரபல பாதாளகுழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு  புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது அரசியல் பரப்பினுள்ள சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது பல புதுதகல்களும் கசிந்துள்ளன.

எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களில், நேற்று கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்த வழங்கானாது, கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, ஆயுத வர்த்தகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட 11 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தபட்டனர்.

எனினும், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த 11 பேருக்கும் எதிராக வழக்கு தொடர்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லையென சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கிய நிலையில், சந்தேகநபர்களை விடுவித்து நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், சுமந்திரனை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டிய சந்தேகத்திலும் ஆயுத கடத்தல் தொடர்பிலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கணேமுல்ல விளக்கமறியலில் இருந்து தமது பொறுப்பில் எடுத்து, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் தடுத்து வைத்து 2019 ஆம் ஆண்டு முதல் விசாரித்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், நேற்று காலை புதுக்கடை நீதிமன்றினுள் நடந்த துப்பாக்கி சூட்டில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டார்.

இதேநேரம் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  பொது அமர்வுகளின் போதும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்;றில் நேற்று உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை பிரதி சபாநாயகரிடம் விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர்,

இந்த விவகாரம் தொடர்பில் சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று  தெரிவித்தார்.

 
இதேநேரம் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க என மோசமான ஆட்சியாளர்களாக இனங்காணப்பட்ட காலங்களில் கூட இவ்வாறான ஒரு கொலை சம்பவம் இடம்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவர்களின் காலத்தில் நீதிமன்றத்தின் குற்றவாளி கூண்டினுள் வைத்து ஒருவர் கொலை செய்யப்படவில்லை என்றும் இவ்வாறான சம்பவங்கள் மூலம் இந்த அராசாங்கம் ஒரு செயல் திறன் இல்லாத அரசாங்கம் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இதற்கான பொறுப்பை ஏற்று, பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய அமைச்சர் ஒருவர் பதவி விலகினால் மாத்திரமே நாட்டில் பாதுகாப்பு உறுதியாக இருக்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும் என்றும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்குக் குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் எங்கும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்தது.

இவ்வாறு அரசாங்கம் குறிப்பிட்டு ஓரிரு நாட்களில் கொலைச் சம்பவங்களே அரங்கேறியுள்ளன என நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இதேநேரம்  நாளாந்தம் கொலைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இதற்கு தீர்வை காண்பதற்கு உடனடி தீர்வு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சட்டமொழுங்கை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு எதிர்கட்சி தயாராகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படுவதாகவும்  வெளிநாட்டிலுள்ள பாதாள கோஷ்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.